கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் 3வது மாடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் 8வது மாடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கு கொலையாக இருக்கலாம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மவுலி என்பவரது மனைவி சுனிதா, கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் திகதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவியை காணவில்லை என அவரது கணவர் புகாரளித்த நிலையில், மருத்துவமனையின் 8-வது மாடியில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் சடலமாக அந்த பெண் மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 23-ந் திகதி அந்த பெண் வார்டில் இருந்து காணாமல் போனதாக வார்டு ஊழியர்கள் தான் தகவல் தெரிவித்ததாகவும், அதன் பின்னர், பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்து 31-ந் திகதி தான் அவர் புகார் அளித்ததாவும் கூறுகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவது டவர் பிளாக்கில் 3வது தளத்தில் உள்ள கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், 8-வது தளத்தில் உள்ள ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் மின் பராமரிப்பு அறையில் சடலமாக கிடந்தது எப்படி என்பது தான் இவ்வழக்கில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சுனிதா அனுமதிக்கப்பட்ட போது 73 சதவீத ஆக்சிஜன் அளவுடன் ஆக்சிஜன் சிகிச்சையில் இருந்தார் என்றும், வேறொருவர் துணை இல்லாமல் 8-வது தளத்திற்கு சென்றிருக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் 3- வது டவர் பிளாக்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பெண் காணாமல் போன நாளில், பணியில் இருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, காணாமல் போன பெண்ணின் சடலத்தை ஏழு பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.