வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது டாக்டர்களின் அஜாக்கிரதையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கத்தரிக்கோல் தற்போது அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38).

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குபேந்திரி (33). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 2008-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15-ந்தேதி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இவர்களுக்கு தற்போது, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. பிரசவத்துக்கு பிறகு குபேந்திரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி இவருக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டதால், குபேந்திரியை, அவரது கணவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குபேந்திரியின், வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும், பாலாஜியிடம் டாக்டர்கள் மழுப்பலாக பதில் அளித்து, ஸ்கேன் அறிக்கையும் அவரிடம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாலாஜி அவரது மனைவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு மீண்டும் அவருக்கு ஸ்கேன் எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பாலாஜியிடம் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கத்தரிக்கோல் தான் வயிற்றினுள் இருக்கிறது என்பது குறித்து சரிவர சொல்லாமல், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டுமே பாலாஜியிடம் டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பாலாஜி இதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, குபேந்திரிக்கு அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கத்தரிக்கோலை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

தனது மனைவிக்கு 3-வது பிரசவத்தின்போதுதான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது டாக்டர்கள் அஜாக்கிரதையாக வயிற்றுக்குள் கத்திரிகோலை வைத்து தைத்துவிட்டனர் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, பாலாஜி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு ‘இ-மெயில்’ மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ‘எனது மனைவிக்கு கடந்த 18-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு ஸ்கேன் எடுத்து பரிசோதித்ததில், கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

ஆனால், டாக்டர்கள், ஸ்கேன் அறிக்கையை எங்களிடம் தர மறுத்து, வயிற்றுக்குள் இருக்கும் கத்திரிக்கோலை மறைக்க முயற்சி செய்தனர்.

பின்னர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து, கத்தரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

12 வருடம் கழித்து, வயிற்றுக்குள் இருக்கும் கத்தரிக்கோலை எடுக்க எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது எனது மனைவி உடல் பலவீனம் அடைந்து, அன்றாட கூலி வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

எனவே, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீதும், கட்டண ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே அறிக்கையை தர மறுத்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மீதும், மேலும், எனது மனைவியின் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரேயின் முழு உண்மை அறிக்கையை தர மறுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்து 12 வருடம் கழித்து அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.