அவுஸ்திரேலியாவில் தமிழக பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்த தம்பதியினர்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வீட்டு பணிப்பெண்ணாக சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்த அவுஸ்திரேலிய தம்பதியினர் குற்றவாளிகள் என விக்டோரிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது அத்தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது தம்பதியினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் விசா முடிவடைந்த நிலையில் அவர் இந்த வழக்கினை போலியாக தொடுத்துள்ளதாக வைத்த வாதத்தை நீதிபதிகள் குழு நிராகரித்திருக்கின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 8 ஆண்டுக்காலம் குறிப்பிட்ட பணிப்பெண்ணை வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் அடிமையாக வைத்திருந்து, பல்வேறு கொடுமைகளை செய்ததாக அப்பெண்ணின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஒரு நாளுக்கு அவருக்கு 3 அவுஸ்திரேலிய டாலர்கள் (170 இந்திய ரூபாய்) என்ற வீதமே சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவுஸ்திரேலிய தம்பதியினர், அப்பணிப்பெண்ணை தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவராகவே நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

முன்பு நடந்த விசாரணையின் போது அத்தம்பதியரின் வழக்கறிஞர், வீட்டினர் அனைவரும் அப்பெண்ணை ‘அம்மாச்சி’ என்று அன்பாகவே அழைத்து வந்ததாகவும் வீட்டு வேலைகளில் உதவி புரிந்து வந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தமிழகப் பெண், தன்னை கொடுமைப்படுத்தியதாக விசாரணையில் கூறியிருந்த நிலையில்,இத்தம்பதியனர் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வேறு நாட்டைச் சேர்ந்த பெண்ணை அடிமையாக நடத்தியமை தொடர்பில் தம்பதியினர் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன