சீனாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன….

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இந்த வாரத்துக்குள் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருந்தாக்கல் விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில் 3 இலட்சம் “சினோப்ஹார்ம்” தடுப்பூசி குப்பிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான ஆவணத் தயாரிப்புக்கள் சீன தூதரகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தியின் மூலம் இந்த தடுப்பூசிகள் தருவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கைக்கு தருவிக்கும் வகையில் இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகாரசபை விரைவில் தமது ஒப்புதலை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.