நொறுக்குத்தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்கு சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்! என்றோ, எனக்கு பப்ஸ் வேணும் டாடி என்றோ கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை.

இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்களில் மிக்சர், சிப்ஸ், பீட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். ஓர் உணவு வேளைக்கும், இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலை கொடுக்க ஏதேனும் தீனி தேவை. இதையே எனர்ஜி ரீஃபில்லிங் என்று கூறுகிறோம். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பி தள்ளும் ஸ்நாக்ஸ் என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத்தீனியால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிய பார்ப்போம்.

நொறுக்குத்தீனி பழக்கம் நோயை உண்டாக்குமா?

சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரீக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தான் அதிகம்.

தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும்.

மேலும், ஒரே எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்தி செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரிக்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.

இதற்கு ஆரோக்கியமான மாற்று என்ன?

வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த சுண்டல், பொரிகடலை, அவல், சோளக்கருது, பொரி உருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளை கொடுக்கலாம்.

மேலும் கப்பை, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

பாட்டில் குளிர்பானங்களைவிட இளநீர், மோர், கூழ் வகைகள், காய்கறி சூப்கள், அருகம்புல், வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் ஃப்ரூட்சாலட், வெஜ்சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன.

இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியவை. இதனால் ரத்தஅழுத்தம் மற்றும் உடல்எடை கட்டுப்படுகிறது.

ஆரோக்கியமான நொறுக்கு பண்டங்களை எந்த அளவு எடுத்து கொள்ளலாம் ?

மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனி அனைத்து வயதினருக்கும் தேவை.

என்னதான் ஆரோக்கியமானது என்றாலும், எப்போதுமே சாப்பிட்டு கொண்டிருப்பது ஆபத்துதான். தேவையான நேரத்தில் மட்டுமே குறைந்த அளவு சாப்பிடலாம்.

வாரத்துக்கு 2 நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலட்டுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர்திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், வெஜ் சான்ட்விச், எக் சான்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்த வரை அதிகம் வாங்கி ஃபிரிட்ஜில் அடைத்துவைத்து சாப்பிடுவதை தவிர்த்து, தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்வது சிறந்தது.

வீட்டிலேயே தின்பண்டங்களையும், நொறுக்குததீனிகளையும் ஆரோக்கியமான முறையில் சமைத்து ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமிடுங்கள்.