சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி வந்தது.
இதனால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் சோதனை முயற்சியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.
இதனிடையே, இந்தியாவிலும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்த ஃபைசர் பயோன்டெக் என்ற கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் இவர்கள் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறிய தகவலில், உயிரிழந்த அனைவரும் 80 வயதுக்கு அதிகமானவர்கள் எனவும், தடுப்பூசி போடுவதற்கு முன் அந்த நபர்கள் மிகவும் மோசமான உடல்நிலையை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் இந்த 23 பேரின் உயிரிழப்புக்கும், தடுப்பூசிக்கும் வேறு ஏதாவது நேரடி தொடர்பு உள்ளதா என்பது இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர்களில் பலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை போடவேண்டாம் என நார்வே பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.