மகிழ்ச்சியான வாழ்வு உடனே பறிக்கப்படும் போது, அவர் இப்படி ஒரு நிலையை எட்டி இருக்கிறார் என்று நடிகை குஷ்பூ சித்ரா தற்கொலை குறித்து தெரிவித்துள்ளார்.
தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழ் திரையில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர் முல்லை என்றால் பலருக்கும் பிடிக்கும்.
இந்த நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு அவர் இரவு 2 மணி அளவில் திரும்பியுள்ளார். அங்கே இவருடைய வருங்கால கணவர் ஹேமந்த் என்ற தொழிலதிபரும் உடன் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஹேமந்த்திடம் தான் குளிக்க செல்வதாக கூறி விட்டு, பாத்ரூம் உள்ளே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். 3:00 மணி அளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. வெகுநேரமாகியும் சித்ரா வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த ஹேமந்த் ஹோட்டல் ஊழியர்களுடன் சேர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவரை சடலமாக கண்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பூ, “மகிழ்ச்சியான வாழ்வு உடனே பறிக்கப்படும் போது, அவர்களை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கியது எது? அவர் எவரையோ அணுக விரும்பியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் சித்ரா குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அவருடைய வலியை என்னால் உணரமுடிகிறது. இப்போது நீங்கள் விரும்பியதை அடைந்து விட்டீர்கள் என்று நம்புகிறேன். அமைதி” என்று தெரிவித்துள்ளார்.