நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். விஜய்யின் மக்கள் இயக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், விஜய்யின் உயிருக்கே ஆபத்து இருப்பதாகவும் பரபரப்பு பேட்டி அளித்து வந்தார்.
இந்த நிலையில், விஜய்யால் இயக்கத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடன் வைத்திருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர், தனது மகளை சமாதானப்படுத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டு, தனது கட்சிக்கு வந்தால் நல்ல பதவி தருகிறேன் என்று விஜய் ரசிகர்களுக்கு ஆசைவலை விரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் தனது ரசிகர் ஒருவர் கூட தந்தையின் ஆசை வார்த்தையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, மாவட்ட நிர்வாகிகள் 50 பேரை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ரசிகர்கள் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்த நிலையில், செய்தியாளர்கள் இந்த தகவலை அறிந்து அங்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து திறந்திருந்த விஜய் மக்கள் இயக்க அலுவலக வாயில் மூடப்படவே, அங்கு வந்த நிர்வாகிகளின் அலைபேசியும் பறித்து வைக்கப்பட்டு காத்திருக்க செய்தனர். நீண்ட நேரம் ஆகியும் விஜய் வராத நிலையில், மதிய நேர சாப்பாடும் வராமல் தவித்துள்ளனர்.
பின்னர் நண்பர்கள் மூலமாக சாப்பாடு பார்சலை வரவழைத்த சூழலிலும், அலுவலக நிர்வாகிகளிடம் கடுமையான வாக்குவாதம் செய்து கதவை திறக்க வைத்து சாப்பாடை பெற்றுள்ளனர். பின்னர் மாலை நேரத்தில் நிர்வாகிகள் அனைவரும் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், விஜய் மற்றொரு நாள் தங்களை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளனர். ரகசிய கூட்டம் குறித்து தகவல் செய்தியாளர்களுக்கு தெரியவந்ததால், அவர் இங்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.