மரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் பிரித்தார்கள்: கிளிநொச்சி ஜோடி தனித்தனியாக அடக்கம்!

கிளிநொச்சியில் ஒன்றாக உயிரை மாய்த்த காதல் ஜோடியின் இறுதிச்சடங்குகள் இன்று தனித்தனியாக நடைபெற்றது.

பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்- ஒன்றாக- காதல் ஜோடியொன்றின் சடலம் நேற்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒன்றாக தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த சுசிதரன் (28) (இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டவர்) மற்றும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த அண்மையில் பட்டதாரி நியமனத்தின்படி கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், குடும்பங்களின் எதிர்ப்பு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சமூக விவகாரத்தினால் ஒன்று சேர முடியாமல், மரணத்தின் ஒன்றிணைந்த அந்த ஜோடியின் உடல்கள் இன்று தனித்தனியாக அடக்கம் செய்யப்பட்டன.

இருவரது உடல்களும் அவரவர்களின் பிரதேசங்களில் அடக்கம் செய்யப்பட்டன.

மரணத்தில் ஒன்றிணைந்தவர்களை, மரணத்தின் பின் மனிதர்கள் பிரித்தார்கள்.