எஸ்.பி.பிக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை?.. எனது பேச்சை மட்டும் நம்புங்கள்..

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

கடந்த மாதம் 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, கடந்த 13 ஆம் தேதி மூச்சு திணறல் அதிகமானதால் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் எஸ்.பி.பி-யின் மகன் சரண் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில். எஸ்.பி.பாலசுப்பிரமணிதிற்கு கொரோனோ தொற்று இல்லை என தெரிவித்தார். எஸ்.பி.பிக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இது குறித்து எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில் கூறப்பட்டுள்ளதாவது, ” எஸ்.பி.பி உடல்நிலை சீராக இருக்கிறது. அவரது உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தையின் உடல்நிலை குறித்து நான் கூறுவதை நம்புங்கள். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக தகவல் வெளியானது உண்மை இல்லை. தயவு செய்து யாரும் போலியான தகவலை பரப்ப வேண்டாம் ” என்று கூறியுள்ளார்.