காரசட்னி செய்வது எப்படி தெரியுமா?

காரச் சட்னி வகைகள் என்றால் நிறைய உள்ளன. அதில், தக்காளி கொண்டு காரச்சட்னி, வெங்காயம் கொண்டு காரச்சட்னி, இரண்டையும் சேர்த்து காரச் சட்னி அரைப்பது என விதவிதமாக காரச்சட்னி செய்தாலும் அதனை அன்றைய ஒரு நாளை மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும்.

வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் காரசாரமான சப்புக் கொட்டிக் கொண்டே சாப்பிடக் கூடிய எளிய கார சட்னியை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

இதற்கு வரமிளகாய், பூண்டு, புளி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தால் போதுமானது. ஒரு சொட்டு தண்ணீர் சேர்க்காமல் வெறும் எண்ணெய் கொண்டே இந்த சட்னி செய்வதால் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

அதற்காக பத்து நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்து சாப்பிடத் தேவையில்லை. அதிகபட்சம் 5 நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தேவையான பொருட்கள்:

வர மிளகாய் – 8, பூண்டு பல் – 20, புளி – சிறிய நெல்லி அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு அடி கனமான வாணலியை எடுத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்காமல் இந்த சட்னி அரைக்க இருப்பதால் ஒரு குழி கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றினால் சரியாக இருக்கும்.

அதன் பின் எடுத்து வைத்துள்ள வரமிளகாய்களை போட்டு லேசாக வறுக்க வேண்டும். வர மிளகாய் கருகிப் போகாமல், நிறம் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும்.

லேசாக வறுத்தால் மட்டும் போதும். அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதன் பின் அதை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதே எண்ணெயில் பூண்டு பற்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். பூண்டை மட்டும் நன்கு எண்ணெயில் பொரிக்க விடுங்கள். பூண்டு பொரிந்து வந்ததும் அதில் நெல்லிக்காய் அளவு புளியை சிறிது சிறிதாகப் பிய்த்து போட வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அவற்றை மிளகாயுடன் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

எடுத்து வைத்த பொருட்களை நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். வதக்க பயன்படுத்திய எண்ணெயை தனியே ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நன்கு ஆறியபின் மிக்ஸி ஜார் எடுத்துக் கொண்டு அதில் வதக்கிய பொருட்களை போட்டு சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொண்டு ஆறவைத்த எண்ணையை பாதி அளவு ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த பின் தனியே எடுத்து வைத்த மீதமுள்ள எண்ணெயை அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது. மிக அட்டகாசமான சுவையில் காரசாரமான எளிதில் செய்யக்கூடிய காரச்சட்னி இப்போது தயார்.

இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கும், எல்லா விதமான வெரைட்டி ரைஸ்களுக்கும் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.