ஜனாதிபதியின் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட சனத் நிஷாந்த!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுத் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் பயணித்து வருகின்றார். இதன் ஒரு கட்டமாக அவர் புத்தளம் ஆனமடுவைக்கு சென்றிருந்த போது ஏற்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனமடுவையில் ஜனாதிபதி தனது வாகனத்தில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை இறக்கி விட்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கர ஜயரத்னவை ஏற்றிக்கொண்டமை குறித்தே சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் வாகனத்தில் இருந்து சனத் நிஷாந்த இறக்கி விடப்பட்ட போது, பிரியங்கர ஜயரத்னவின் ஆதரவாளர்கள் ஊ சத்தமிட்டனர்.

சனத் நிஷாந்த மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் புத்தளம் மாவட்டத்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

அதேவேளை சனத் நிஷாந்தவின் ஆதரவாளர் ஒருவர், பிரியங்கர ஜயரத்னவின் மருமகன் உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னரான நாட்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தம்மை வைத்து விளம்பரப்படுத்தவோ தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது தம்மை ஈடுபடுத்தவோ கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஒரு வேட்பாளரை தாம் தனது வாகனத்தில் அழைத்துச் செல்வது சமூகப் பரப்பில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.