அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார குழு அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ட்ரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், உலகளவில் அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
அங்கு 29 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் திட்டமிட்டபடியே எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறங்கி இருக்கிறார். கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்க தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் பிரச்சார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்காக ஜனாதிபதி ட்ரம்புடன் தெற்கு டகோட்டா மாகாணத்துக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி ட்ரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.