தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் குமார் (வயது 23). இவர் வங்கியில் ஏ.டி.எம் பணம் நிரப்பும் பணியை செய்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அருகே கைலாசநாதர் சாலையில் வசிக்கும் தனது தாய் மாமாவான செந்தில் குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த சமயத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால், அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், வீட்டிற்கு வந்த நாட்கள் முதலாகவே எந்த நேரமும் அலைபேசியும் கையுமாக இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து கொண்டிருந்த ஆனந்த் குமார், சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ஆனந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆனந்த் குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணை பார்க்காமலேயே காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக தந்தை விபத்தில் சிக்கியதில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தருணத்தில், பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்கை துவக்கியுள்ளார். இதில் புகைப்படம் மூலம் ஒரு பெண்ணின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணும் மனதுக்கு ஆறுதலாக பேசி வந்த நிலையில், நாளடைவில் இது இவர்களுக்கு இடையே காதலாக மாறி, இருவரும் பல மணி நேரம் பேசி வந்துள்ளனர்.
ஆனந்தகுமாரின் அலைபேசி எண்ணை பெற்ற அந்தப் பெண்ணும் வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் கால் மூலமாகவே பேசி வந்துள்ளார். ஒருமுறைகூட வீடியோ காலில் பேசாத நிலையில், கடந்த சில தினமாக இன்ஸ்டாகிராம் காதலி தன்னுடன் சரிவர பேசியதால் மனம் உடைந்து ஆனந்தகுமார் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக குடும்பத்துடன் கூறி வேதனைப்பட்டு நிலையில், இன்ஸ்டாகிராமில் பழகுவது உண்மையான பெண்ணாக இருக்கும் பட்சத்தில், திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக ஆனந்தகுமாரை பெண் பிளாக் லிஸ்டில் போட்டதால், பெண்ணை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் காதலி பேச மறுத்ததால், ஆனந்தகுமார் தற்கொலை முடிவை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் காதலியுடன் பேசிய தகவல்கள் மற்றும் ஆடியோக்கள் என அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.
தனது தற்கொலைக்கு பின்னரும் பெண்ணிற்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாது என்று அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனந்தகுமாரின் அலைபேசி அலைபேசி தகவல் தொழில்நுட்ப குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கடைசியாக வாட்ஸ் அப்பில் அந்த பெண்ணிற்கு அனுப்பிய ஆடியோ பதிவு மட்டும் காவல்துறையினரின் கை வசம் கிடைத்துள்ளது. இதில் ஆனந்தகுமார் அந்த பெண்ணை பேச சொல்லி கெஞ்சி கூத்தாடி பதிவு செய்த குரல் பதிவுகள் வெளியாகியுள்ளது.







