திருகோணமலையிலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பற்றி இன்று (30)இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 2829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான 47 நோயாளர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் கந்தளாய் – ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 2101 பேருக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில் 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு நபர்களின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் PCR பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார திணைக்கள ஊழியர்கள் தமது உயிர்களை பணயம் வைத்துக் கொண்டு நோயாளர்களின் விடயத்தில் இரவு பகலாக சேவையாற்றி வருவதாகவும் தொடர்ந்தும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.