யாழ்.போதனா வைத்தியசாலையில் தாவடியை சேர்ந்த 4 வயது சிறுமி அனுமதி!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யாழ் அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதகருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து யாழில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் அவருடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொற்றுக்குள்ளானவர் வசிக்கும் யாழ். தாவடி கிராமம் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவரின் சகோதரியின் மகள் சில அறிகுறிகளுடன் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.