பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகுவார் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.
பிரதமர் அலுவலகம் உட்பட பல்வேறு ஆதாரங்களை சரிபார்க்க மலேசியாகினியின் முயற்சிகளுக்கு கிடைத்த பதில் “ஊடக அறிக்கைக்காக காத்திருங்கள்.”
கடிதம் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பத் தயாராகி வருவதாக ஒரு வட்டாரம் கூறியதாகவும், ஆனால் அந்த அறிவிப்பை சரிபார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் துன் மகாதீரின் இல்லத்திற்கு இன்று காலையில் வந்து சேர்ந்த அன்வார் இப்ராகிம், அவரது துணைவியாரும் துணைப் பிரதமருமான வான் அசிசா ஆகியோரை உள்ளிட்ட குழுவினர் அவரைச் சந்தித்த பின்னர் அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் வெளியேறினர்.
எனினும் அந்தச் சந்திப்பு குறித்த விவரங்களை இருதரப்புகளின் சார்பிலும் இதுவரையில் யாரும் வெளியிடவில்லை.
அன்வார், தனது துணைவியாரோடு தற்போது பிகேஆர் தலைமையகம் வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து மாமன்னரைச் சந்திக்க பிற்பகல் 2.30 மணியளவில் ஜாலான் டூத்தாவில் உள்ள மாமன்னரின் அரண்மனைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னரின் அரண்மனையின் முன்னால் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகையாளர்களும் பெருமளவில் அங்கு குழுமியிருக்கின்றனர்.