மட்டக்களப்பு கிரான் சந்தியில் கோர விபத்து..!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி சந்திவெளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரிய ரக லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை நுனுகலையைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை விபத்தில் காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரியரக லொரியினது சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.