‘PK-MK’காம்பினேஷன் அரசியல் போக்கை மாற்றுமா…?

வாய்மொழித் தகவலாகவும், செவிவழிச் செய்தியாகவும் இருந்த பிரசாந்த் கிஷோர் – திமுக உறவு, இப்போது அதிகாரபூர்வமாக ஸ்டாலினாலேயே அறிவிக்கப்பட்டு விட்டது. விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒரு விஷயத்தை எல்லோரும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். தமிழக அரசியலை அடுத்த ஸ்டெப்பிற்கு நகர்த்தியிருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இதுவரை நடந்த அத்துணை தேர்தல்களிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை, மேடைப் பிரச்சாரம், ஊடகப் பிரச்சாரம், பத்திரிகைப் பங்களிப்பு என்ற வகையில் மட்டுமே போய்க்கொண்டிருந்தது. தேர்தல் வியூகங்களை தலைவர்களே வகுப்பார்கள். அதிலே, வியூகம் வகுப்பதிலே தலைசிறந்தவராகக் கருதப்பட்டவர் கருணாநிதி. சிலசமயங்களில் அவருடைய வியூகங்களும் அறுந்து அனாதையானது வேறு விஷயம்.

ஆனால், வியூகம் வகுக்கும் வேலையை மட்டும் தலைவர்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை. இப்போது, முதன்முறையாக தேர்தல் கால வியூகங்களுக்கு தனிப்பட்ட அமைப்பை நாடியுள்ள ஸ்டாலினை விமர்சிப்பவர்கள் ஒரு உண்மையை உணருங்கள்..

முதன்முதலாக ஸ்டாலின், தன் பலவீனத்தை உணர்ந்திருக்கிறார். இதுதான் ஒரு தலைவருக்கான ஆரம்பத் தகுதி, நம்மைக் கேட்டால் தலைமைப் பதவிக்கான தகுதி காணலில், முதல் அடியை ஸ்டாலின் இப்போதுதான் எடுத்து வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். வாழ்த்துக்கள்.

சரி, பா.ஜ.க. ஏன் பிரசாந்த் கிஷோர் விஷயத்தில் இவ்வளவு பொங்குகிறது! அது மட்டும் என்ன யோக்கியம்? 2014 தேர்தலில் மோடியை மாபெரும் தலைவராகக் “காட்டுவதற்காக” பிரசாந்தின் பின்னால் போன கட்சிதானே! அரசியலில் யார் விதிவிலக்கு?

இது ஸ்டாலினுக்கு அல்ல, பிரசாந்தின் குழுவின் தொப்பியில் மேலும் ஒரு இறகு… மிக முக்கியமான இறகு…

நடைப்பயணம், திண்ணைப் பிரச்சாரம், நேருக்கு நேர் நிகழ்வுகள், ஊடகங்களைத் தமக்கு ஆதரவாகத் திருப்புதல், இனப் பிரச்சாரம், மொழிப் பிரச்சாரம், மேடை மினுமினுப்பு, மாநாடுகள், ஊர்வலங்கள், வலுவான கூட்டணி இவை எல்லாமும் இருந்தும் கூட தான் பெறமுடியாத வெற்றியைப் பெறுவதற்கு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

இதுவரை எடப்பாடி மட்டுமே எதிரிலே.. ஆனால், வரும் தேர்தலில் கூடுதலாக இன்னொரு ஜனரஞ்சக முகம். ரஜினியின் வரவு வேறு சேரப் போகிறது. ஆகவேதான், ஸ்டாலின் இந்த முடிவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்.

இருக்கட்டும், பிரசாந்த் கிஷோருக்கு ஒரு வார்த்தை PK ஜி! இது வேறு மாதிரியான களம். ஏனைய இந்திய மாநிலங்களை வைத்து இதை எடைபோட்டு விடாதீர்கள் ஜி! இந்தக் களத்தில்தான், சிங்கம் பசுவாகவும், மான் புலியாகவும் மாறி மாறிப் புதிர்போடும். இதை அறியாமல் தன் 52 இன்ச் மார்பை அகட்டிப் பேசியும் கூட மோடிகளால் இங்கு முத்துக்குளிக்க முடியவில்லை. ஏனென்றால், மோடிமஸ்தான்கள் இங்கு ஏற்கனவே அதிகம்.

ஆனால், ஒன்று PK ஜி இங்கு மட்டும் நீங்கள் வெற்றியடைந்து விட்டால், அகில இந்தியாவை நீங்கள் மிகச் சுலபமாக ஆக்ரமித்து விடுவீர்கள் ஜி!

தி.க. காரர்களுக்குத்தான் ஒரு தர்மசங்கடம். ஆண்டாண்டு காலமாக ஆரியத்தை எதிர்த்த ஓர் இயக்கம் பிரசாந்த் கிஷோர் என்னும் பிராமண வியூகத்தைப் பின்பற்றப் போகிறதே என்று. சரி, அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.

“பஞ்சாங்கங்களுக்கு மத்தியில் ஒரு பகுத்தறிவாளர்” என்று டைட்டில் கொடுத்து , திராவிடத் தீர்த்தம் தெளித்து, புனிதப் படுத்தி விடலாம்.

பார்க்கலாம்! PK + MK கூட்டு ஓகே ஆகுமா… அரசியலின் “போக்கே” மாறுமா! அல்லது ஜோக்காய் வீழுமா?