எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1000 ரூபாவாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நேற்று முன்தினம் (14) ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்தது.
ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும் விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பாக 105 ரூபாவும் அடங்கலாக 855 ரூபா வழங்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தில் மேலதிகமாக நாளாந்தம் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் பேசப்பட்டாலும் அதனை இறுதி வரை நடைமுறைப்படுத்த முடியாமற்போனது.
பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்துவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் தொழிற்சங்கங்கள் மாதாந்தம் 150 ரூபாவை சந்தாவாக அறவிடுகின்றன.
1000 ரூபா சம்பளம் தொடர்பில் அமைச்சர்களிடம் இன்றும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கான நிதியை வழங்குவது தொடர்பில் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் திறைசேரியூடாக அதனை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கம் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தமது பொறுப்பு எனவும் அவர் கூறினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களிடம் இதனை செய்யுங்கள் என கூறுவதால் பலனில்லை. அவர்கள் அதனை செய்ய மாட்டார்கள். இறுதியில் இது தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான முறுகலுக்கே வித்திடும் என நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார்.
அரசாங்கம் அறிவித்துள்ளவாறு தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தால், அது தேயிலை தொழிற்துறைக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாகவுள்ள நியாயமான சம்பள அதிகரிப்பு இம்முறையேனும் சாத்தியமாக வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.