யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவபீட மூன்றாமாண்டு மாணவி யுவதியின் பிறிதொரு காதல் உறவு காரணமாகவே கொலை? குறித்த மனைவி கொலையின் உண்மை நோக்கம் என்ன?

பல்கலைகழக சிங்கள மாணவியொருவர் நேற்று முன்தினம் (22) பண்ணை கடற்கரையின் உடற்பயிற்சி நடைபாதையில் கழுத்தறுத்து கொல்லப்பட்டிருந்தார்.

யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவபீட மூன்றாமாண்டு மாணவியான ஹபுஹெட்டிகே டொன் ரோஷானி காஞ்சனா (29) என்பவரே கொல்லப்பட்டார். பதனகொட கொலனி, பேருவளையை சேர்ந்தவர்.

சம்பவ தினத்தில் இளம் ஜோடியொன்று, உச்சிவெயில் நேரம் கடற்கரையோரமாக மெதுமெதுவாக நடந்தபடி உரையாடிச் சென்றதை அங்கிருந்த சிலர் அவதானித்தனர். எனினும், அவர்களின் உரையாடல் சுமுகமாக இருக்கவில்லை, முரண்பட்டு கொண்டதை அங்கிருந்தவர்கள் அவதானித்தனர். பொதுமக்கள் தம்மை அவதானிப்பதையடுத்து, அவர்கள் அங்கிருங்து விலகிச் சென்று, உடற்பயிற்சி நடைபாதையோரம் கதைத்துக் கொண்டிருந்தபோது , திடீரென அந்த யுவதியின் அலறல் சத்தம் கேட்டபோது, அங்கிருந்த சிலர் அந்தப்பக்கம் பார்த்தபோது, யுவதியின் கழுத்தை அறுத்து, கடலுக்குள் ஒரு இளைஞன் தள்ளிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதை அங்கிருந்தவர்கள் கண்டனர்.

ஓரிரு இளைஞர்கள் மட்டுமே, அந்த இளைஞனை பின் தொடர்ந்தனர். பின்னர் அவர் விரட்டிச் செல்லப்பட்டு, பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையாக பிடிக்கப்பட்டார். அங்கு வைத்து நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட யுவதியின் கணவனான மத்துமகே டொன் எரங்க திலீப் குமார (30) என்பது தெரிய வந்தது. பேருவளையின் கண்டகமவை வசிப்பிடமாக கொண்டவர். அவர் பரந்தனிலுள்ள 662வது பிரிகேட்டின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய லான்ஸ் கோப்ரல்.

2017ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பதிவுத் திருமணம் நடந்தது. சிறிதுகாலத்திலேயே அவர்களிற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. யுவதியின் பிறிதொரு காதல் உறவு காரணமாகவே கொலை நடந்ததாக சந்தேகநபர் வாக்குமூலமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட யுவதியின் சகோதரனும், கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்துவபீட மாணவனாக உள்ளார். தந்தையார் களுத்துறையிலுள்ள அரச அலுவலகமொன்றில் ஊழியராக கடமையாற்றுகிறார்.