ஆஸ்திரேலியாவில் குற்றம் புரியும் தமிழ் அகதியின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்..!!

ஆஸ்திரேலியாவில் குற்றம் புரியும் அகதிகளை Character Test எனும் நன்னடத்தை சோதனையின் அடிப்படையில் நாடுகடத்தும் சட்டம் ‘அகதிகளுக்கு பொருந்தாது’ என ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், நன்னடத்தை சோதனையின் மூலம் ஆஸ்திரேலிய அரசால் விசா மறுக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட அகதிகள், அரசின் முடிவிற்கு சட்டரீதியாக சவால் விடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு நன்னடத்தை சோதனை என்ற அளவுகோல் வலுப்படுத்தப்பட்டது முதல், அகதிகள் உள்ளிட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாதவர்களுக்கு இச்சோதனையின் அடிப்படையில் விசா மறுப்பது அல்லது ரத்து செய்வதை அதிகரித்து வந்தது ஆஸ்திரேலிய அரசு.

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் அகதியின் வழக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், குணநலன் தொடர்பிலான இடப்பெயர்வு சட்டத்தின் 501 பிரிவு அகதிகளுக்கு பொருந்தாது எனத் தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஸ்டீவன் ரரேஸ்.

இடப்பெயர்வு சட்டத்தின் 501 பிரிவின் படி, 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் சிறைத்தண்டனை பெறும் ஒரு வெளிநாட்டினரின் விசா தானாக ரத்தாகி, அவர் நாடுகடத்தப்படுவார்.

தமிழ் அகதியின் சார்பாக ஆஜராகியிருந்த ‘அனைவருக்குமான மனித உரிமைகள்’ அமைப்பின் ஆலிசன் பட்டிசன், இது ‘வியக்கத்தக்க தீர்ப்பு’ எனக் கூறியிருக்கிறார்.

“இத்தீர்ப்பு ஆயிரக்கணக்கான அகதிகள் விஷயத்தில் தாக்கத்தை செலுத்தும்,” என ஆஸ்திரேலிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 2019 முதல் ஜூன் 2019 வரையிலான காலக்கட்டத்தில், நன்னடத்தையின் அடிப்படையில் 943 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 2019ன் கணக்குப்படி, நன்னடத்தை சோதனையின் தோல்வியடைந்த சுமார் 600 வெளிநாட்டினர் குடிவரவுத்துறை தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இதில் எத்தனை பேர் அகதிகள் உள்ளனர் என்ற விவரத்தை ஆஸ்திரேலிய உள்துறை வெளியிட மறுக்கிறது.

குற்றம் புரியும் அகதிகளை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றிவோம் என கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சவால் விடுத்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஆளும் தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகின்றது.