5 இலங்கையர்… 3 பெண்கள் அவுஸ்திரேலியாவில் அதிர வைத்த பிக் பொக்கட் திருடர்கள் சிக்கினர்!

அவுஸ்திரேலியாவில் பிக் பொக்கட் திருட்டு குழுவொன்றை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஐந்து பேரும், இந்தியர்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் மூவர் பெண்கள் ஆவர்.

மெல்பேர்ன் நகர போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்களிடமிருந்து இந்த கும்பல் பகல் கொள்ளையடித்து வந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக மெல்பேர்னின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் பிக் பொக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் அதிகரித்திருந்தது.

மெல்பேர்ன் நகரின் மத்தியில் புகையிரதம் – ட்ராம் வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பெரிம் அங்காடிகளில் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு போகின்றவர்கள் ஆகியோரை இலக்குவைத்து இந்தக் கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக கைவரிசை காட்டி வந்தது.

இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த இந்த திருட்டுக்கும்பலில் நால்வர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். மூவர் கடந்த செவ்வாயன்று காலை கைது செய்யப்பட்டார்கள்.

மெல்பேர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடுத்த ஏப்ரல் 14 ஆம் திகதிவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர்கள் ஏழுபேரையும் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து எல்லைக்காவல்படை பரிசீலிக்கக்கூடும் என்று பொலிஸார் எதிர்பார்க்கிறார்கள்.