கும்பகோணத்தில் தில்லியைச் சேர்ந்த பாலியல் வல்லுறவு வழக்கு: 4 பேருக்கு மரணம் வரை சிறை!

கும்பகோணத்தில் தில்லியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது.

புதுதில்லியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கியில் பணி கிடைத்தது. இதற்காக தில்லியிலிருந்து ரயில் மூலம் கும்பகோணத்துக்கு 2018, டிச. 1-ம் தேதி நள்ளிரவு வந்தார்.

நகரில் உள்ள தங்கும் விடுதிக்குச் செல்ல அவருக்கு வழி தெரியவில்லை. எனவே, ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் வழி கேட்டார். அப்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக் கொண்ட ஓட்டுநர் கூடுதல் பணத்தை வசூலிப்பதற்காக வேறு பாதையில் செட்டிமண்டபம் புறவழிச்சாலைக்குச் சென்றார்.

இதையறிந்த அப்பெண் குச்சலிட்டு ஆட்டோவில் இருந்து குதித்தார். இதனால், அச்சமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தப்பிச் சென்றார். இதையடுத்து, அப்பெண் தனது பையுடன் செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்தகுமார் (24), அஞ்சுகம் நகரைச் சேர்ந்த எஸ். தினேஷ்குமார் (25) ஆகியோர் அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் செல்லிடப்பேசி மூலம் தனது நண்பர்களான மூப்பனார் நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் (20), ஹலிமா நகரைச் சேர்ந்த அன்பரசன் (20) ஆகியோரையும் அழைத்தனர். நிகழ்விடத்துக்குச் சென்ற இவர்களும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதன் பேரில் வசந்தகுமார், தினேஷ்குமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியும் (26) கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம்.எழிலரசி விசாரித்து வசந்தகுமார், தினேஷ்குமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மரணமடைந்த பிறகே அவர்களது உடலை வெளியே கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும், நான்கு பேருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.