இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு விடுமுறை நாளில் திடீர் விஜயம் மேற்கொண்ட டக்ளஸ்!

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா விடுமுறை தினமான இன்று(12) அதிகாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மேற்படி மூன்று இடங்களுக்கும் ஏற்கனவே விஜயம் மேற்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக இந்த முன்னறிவித்தல் இன்றிய திடீர் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை(09) இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அன்றைய தினமே உடனடியாக கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள் அனைவரையும் அமைச்சுக்கு அழைத்து தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களையும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

அதேபோன்று கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பேலியகொட மீன் சந்தைக்கு இதேபோன்று அதிகாலை வேளையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த விஜயம் அமைந்திருந்தது.

அதேவேளை, தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்களுக்கான திடீர் விஜயத்தினை நேற்று(11) அதிகாரிகள் சகிதம் மேற்கொண்டிருந்த அமைச்சர், தென்னிலங்கையின் பல்வேறு துறைமுகங்களிலும் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறிப்பாக, மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக தற்காலிக நியமனங்களை வழங்குமாறு அதிகாரிக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று பெறலிய, ஹிக்கடுவ, அம்பலாங்கொட மற்றும் பாணந்துறை ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக அவதானித்தார்.

அத்துடன், அவற்றிற்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் திங்கட் கிழமை(13) அமைச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் திடீர் விஜயத்தினால் நெகிழ்ச்சியடைந்த தென்னிலங்கை மீனவர் சமூகத்தினர் அமைச்சரிடம் தங்களின் எதிர்பார்ப்புக்களை உணர்வுகளையும் வெளிப்படையாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு