புத்தாண்டில் தினமான இன்று உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகள்: இந்தியா முதலிடம்!

புத்தாண்டு தினத்தில் 392,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது யுனிசெஃப்.

2020 புத்தாண்டை முன்னிட்டு பிறந்த குழந்தைகளின் தரவுகளை யுனிசெஃப் வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் உலக மக்கள்தொகை 2019ன் படி, இந்த தரவுகளை யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.

உலக தரவு ஆய்வகத்தின் (WDL) வழிமுறை ஒவ்வொரு நாளும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. அதனடிப்படையில், இந்த தரவுகளைச் சேகரித்துள்ளது யுனிசெஃப்.

அதன்படி 392,000 குழந்தைகள் இந்த புத்தாண்டில் பிறந்துள்ளன. இதில் இந்தியாவில் தான் அதிகளவிலான குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்தியா – 67,385, சீனா – 46,299, நைஜீரியா – 26,039, பாகிஸ்தான் – 16,787, இந்தோனேசியா – 13,020, அமெரிக்கா – 10,452, காங்கோ – 10,247, எத்தியோப்பியா – 8,493 ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பிஜீ தீவில் முதலாவதாகவும், கடைசியாக அமெரிக்காவிலும் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் 2018ஆம் ஆண்டில் 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே இறந்துவிட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்ததனாலும், சிக்கலான பிரசவம், தொற்று நோய்கள் ஆகியவை காரணமாகவும் உயிரிழந்துள்ளன. 2018 மட்டுமின்றி ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் இறக்கின்றன.

எனினும் மருத்துவத் துறையில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றங்கள் காரணமாகப் பிறந்து ஒரு மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 47 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது