நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த தமிழ்ப்பெண்!

சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் மர்மமான முறையில் திருச்சியை சேர்ந்த பெண் உயிரிழந்த நிலையில் அவரது தாயார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதுடன், ஆசிரமம் குறித்து அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுணன் – ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா.

இவரது மூத்த சகோதரி விஜி மஞ்சள் காமாலை நோயினால் கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த சங்கீதா பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் 2010-ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் திகதி சங்கீதா மர்மமான முறையில் உயிரிழந்தார்.

சங்கீதாவை ஆசிரமத்தில் துன்புறுத்தி, கொலை செய்துள்ளதாக பெங்களூரு ராம் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட சங்கீதா உடல் 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் திகதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் சங்கீதா இறப்பால் மன உளைச்சலடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தார்.

சங்கீதா மரணம் குறித்த வழக்கு விசாரணை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கை பொலிசார் சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆசிரமத்தில் உள்ள பலரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரையும் மீட்க வேண்டும் என கோரியுள்ளார்.