கால்களை பிடித்து, அனைவரது மனங்களை வென்ற கேரள முதல்வர்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் மாற்றுத் திறனாளி சிறுவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள முதல்வர்களில் பினராயி விஜயன் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ளார். கேரளாவில் மழை, வெள்ளத்தின் போது, அவர் எடுத்த நடவடிக்கைள் பல மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இன்று கேரளவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுடன் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வெள்ள நிவாரண நிதியாக தான் சேமித்து வைத்த தொகையை, கேரள முதல்வரிடம் மாற்றுத்திறனாளி சிறுவன் பிரணவ் அளிக்க, அதனை முதல்வர் பெற்றுக்கொள்கிறார்.

இதில், மனதை நெகிழ வைத்தது என்னவென்றால், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கைகள் இல்லை. எனவே கால்கள் மூலமாக நிதியுதவிக்கான காசோலையை அளிக்கிறார். அந்த சிறுவன் கால்களினால் கொடுக்கிறான் என்று எண்ணாமல், சிறுவனின் உதவும் மனப்பான்மைக்கு முழு மரியாதை அளித்து அதனை இன்முகத்துடன் பெற்றுக்கொள்கிறார் முதல்வர். கால்களினால் அந்த சிறுவன் செல்பி எடுக்க, அதற்கும் புன்னகையுடன் போஸ் கொடுக்கிறார் பினராயி விஜயன்.

அதுமட்டுமின்றி, சிறுவனின் கால்களை பிடித்து அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் மனதை நெகிழச் செய்கிறது என்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்ததோடு பினராயி விஜயனையும், சிறுவனையும் பாராட்டி வருகின்றனர்.

மாற்றுத் திறனாளி சிறுவனின் காலைத் தொட்டதன் மூலம் மக்களின் இதயத்தை வென்றுள்ளார் கேரள முதல்வர். கேரள முதல்வர்கள் தொடர்ந்து மக்களிடம் மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கின்றனர் என்ற பொதுவான கருத்து இருந்தாலும், பினராயி விஜயன் அதற்கும் ஒருபடி மேலே சென்றுள்ளார் என்றுதான் மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. மக்களும், அவரை முதல்வர் என்று பாராமல் சக மனிதராகவே பார்க்கின்றனர் என்று ட்வீட்டுகள் பதிவாகின்றன.

முதல்வர் பினராயி விஜயன் முதல்வராக இல்லாமல் மக்களோடு மக்களாக செயல்பட்டு, மக்களின் மனதை வென்றுள்ளார். கேரளா மட்டுமில்லாது இந்தியா முழுவதுமுள்ள மக்களுமே அவருக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.