ரூம் போட்டு யோசிப்பாங்களோ…? – முரட்டு சிங்கிள்ஸ்களை வரவேற்க்கும் உணவகம்!

விளம்பர யுக்தி என்பது வியாபாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை சரியாக புரிந்து கொண்டு மயிலாடுதுறையில் தனியார் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அப்படி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அந்த உணவகத்தில் என்ன செய்துள்ளார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

வழக்கமாக இருவரோ அல்லது குழுவாகவோ அமரும் வகையிலேயே உணவகங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் மயிலாடுதுறை கால்டாக்ஸ் பகுதியில் உள்ள உணவகத்தில் தனித்தனி இருக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன. என்னவென்று விசாரித்தால் சமூக வலைதளங்களில் முரட்டு சிங்கிள்ஸ் என்ற பெயரில் வலம் வருபவர்களுக்காகவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உணவக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொண்ணூறுகளில் பிறந்தவர்களையும் கவரும் வகையில் பிரத்யேகமாக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்ணூறுகளில் அதிகம் விளையாடப்பட்ட பம்பரம், பச்சைக் குதிரை, தாயம், கிட்டிபுல்லு, சில்லுக்கோடு, பட்டம் விடுதல், காற்றாடி விடுதல் ஆகியவற்றின் புகைப்படங்களும் உணவகம் முழுவதும் அலங்கரிக்கிறது.

இது குடும்பத்துடன் வருவோரை உற்சாகமூட்டுவதால் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் முகமது அஸ்லாம் கூறுகிறார்.

“ஆகமொத்தம் இந்த உணவகத்த பார்த்தா எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்களேன்” என்றுதான் எல்லாருக்கும் கேட்க தோன்றும். ரூம் போட்டு யோசிப்பாங்களோ….!