பெண்கள் தொடர்பில் பேசுவாது கேலியான விடயமல்ல! ஹிருணிகா பிரேமச்சந்திர.

சஜித் பிரேமதாச, இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினை குறித்து தைரியமாக பேசுவதால் அனைத்து இலங்கை பெண்களும் அவரை பாராட்டுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதாக அளித்த உறுதிமொழியை வைத்து அவரை நகையாடுகின்றனர்.

சஜித் பெண்களின் சுகாதாரம் தொடர்பிலான உண்மையான ஒரு பிரச்சினையைப் பற்றி பேசினாலும் கூட கேலி செய்யப்படுகிறார். சஜித் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு பிரச்சினை பற்றி பேசியுள்ளார்.

சஜித்தை பார்த்து, பெண்கள் தொடர்பில் கவலைப்படுகிறார் என்று ஏளனம் செய்பவர்கள் யாரென்றால் மதுபானத்தை அருந்திய பின்பு தங்கள் மனைவிகளைத் தாக்குபவர்கள் தான். பெண்களும் இந்த பிரச்சினையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதுதான் கவலையளிக்கின்றது.

மேலும், பெண்கள் பருவ வயதை அடையும்போது அதனை கொண்டாடும் ஆண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பற்றி பேசும் போது அதனை ஏளனமாக பார்ப்பது ஏன்?

கொண்டாட்டங்களின் போது அவர்கள் போதையில் சிறுமியரை தொட்டு, புகைப்படம் எடுத்து அவர்களை துன்புறுத்துகிறார்கள்.

இதுபோன்ற செயல்களை அவர்கள் செய்யலாம் ஆனால் சானிட்டரி நாப்கின்களை வழங்குவதை கேவலமானதாகவும் குற்றமாகவும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார்.