இந்திய விவசாயிகளுக்காக சீனாவை புறக்கணித்த மோடி.!

சீனாவை பின்புலமாக கொண்டு இயங்கும் ஆசியான் கூட்டமைப்பில் 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார மாநாடு பாங்காக்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மலிவான விவசாய பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவியும், இதனால் இந்திய உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என இந்திய விவசாயிகளும், வணிகர்களும் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பாங்காக் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, இது போன்ற முக்கிய முடிவுகள் இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினரின் நலனுக்கும் மிக முக்கிய பங்கிருப்பதாக கூறினார். இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக உருவாக்கிய பணியாளர்களும், நுகர்வோரும் சமஅளவில் முக்கியத்துவம் பெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் அனைத்து இந்தியர்களின் நலன் சார்ந்தே முடிவெடுக்க முடியும் என்பதால், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சாதகமான பதிலை தன்னால் கூற முடியவில்லை என பிரதமர் தெரிவித்தார்.

இதையடுத்து, கூட்டுறவு வர்த்தக ஒப்பந்தம் தனது உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், ஒப்பந்தத்தின் முடிவுகள் நியாயமற்று இருப்பதாக இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் விஜய்தாக்குர் சிங் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தில் இணைய முடியாது என இந்தியா தெரிவித்து விட்டதாக  குறிப்பிட்டார். இந்தியாவின் முக்கிய நலன்கள் சார்ந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.