மண்ணைக் கவ்விய இந்திய அணி.. தோல்விக்கு காரணம் இதுதான்..

டெல்லி : வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா வங்கதேச அணியை விட பலமாக இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும் வங்கதேசம் வெற்றியை தட்டிப் பறித்தது.

ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணியின் தோல்விக்கு சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

முதல் டி20 போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. முஷ்பிகுர் ரஹீம் 60 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டியில் பல கட்டத்தில் தவறுகள் செய்தார்கள். அதனால், ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்தியா போட்டி முழுவதும் திணறியபடியே ஆடியது. பேட்டிங்கில் இருந்தே சொதப்பல் துவங்கியது.

இந்திய அணி தொடர்ந்த இடைவெளிகளில் விக்கெட்டை இழந்தபடியே இருந்தது. ஆனால், இதை விட பெருங்குழப்பமாக அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட், சிவம் துபே நிதானமாக ஆடியதும், நிதானமாக ஆடும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி ஆட்டமிழந்த சம்பவமும் நடந்தது.

26 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்த ரிஷப் பண்ட், தான் ஆடிய போது, பொறுப்பாக ஆடி வந்த துவக்க வீரர் தவானை ரன் அவுட் ஆக்கினார். இரண்டாவது ரன் ஓட தவானை அழைத்த பண்ட், பாதியில் சுதாரித்து பின்வாங்கினார். ஆனால், தவான் ரன் அவுட் ஆனார். அது பேட்டிங்கில் பெரும் அழுததை இந்திய அணிக்கு கொடுத்தது.

அடுத்து 148 ரன்கள் என்ற வெற்றி பெறக் கூடிய ஸ்கோரை எடுத்த இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பியது. ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த ரோஹித் சர்மா, அறிமுக வீரர் சிவம் துபேவை ஆறாவது பந்துவீச்சாளராக பயன்படுத்தாமல் இருந்தார். வங்கதேசம் வெற்றியை நெருங்கிய நிலையில், 20வது ஓவரை சிவம் துபேவுக்கு அளித்தார். அவரை முன்பே பயன்படுத்தி இருந்தால் பந்துவீச்சாளர் சுழற்சிக்கு அது உதவி இருக்கும்.
மிக மோசமான தவறுகள் 10வது ஓவரில் நடந்தது, சாஹல் வீசிய அந்த ஓவரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பந்தில் எல்பிடபுள்யூ-வுக்கு ரிவ்யூ கேட்டு இருந்தால் இந்தியாவுக்கு விக்கெட் கிடைத்திருக்கும். ஆனால், ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்கவில்லை.


அதே ஓவரின் கடைசி பந்தில் ரிஷப் பண்ட் பிடித்த கேட்ச்சுக்கு அம்பயர் அவுட் தர மறுத்தார். பண்ட் பந்து எட்ஜ் ஆனதாக கூறி கேப்டன் ரோஹித்தை ரிவ்யூ கேட்க வைத்தார். ஆனால், பந்து எட்ஜ் ஆகவில்லை என தெரிய வந்தது. இந்தியா ரிவ்யூ வாய்ப்பை வீணாக இழந்தது.

18வது ஓவரில் அபாரமாக ஆடி வந்த முஷ்பிகுர் ரஹீம் கொடுத்த கேட்ச்சை க்ருனால் பண்டியா நழுவ விட்டார். அது தான் போட்டியின் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் போட்டியில் காற்று மாசு கடும் விளைவை ஏற்படுத்தியது. போட்டி நடுவே வீரர்கள் இருமல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக சிரமப்பட்ட காட்சிகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அது இரண்டு அணி வீரர்களுக்கும் பொதுவானது என்றாலும், க்ருனால் பண்டியா கேட்ச்சை நழுவ விட்ட போது, அதற்கு முந்தைய ஓவர்களில் அவர் மூச்சு விட சிரமப்பட்ட காட்சிகள் நினைவுக்கு வந்து பரிதாபத்தை ஏற்படுத்தியது.

வங்கதேச அணி துவக்கம் முதல் தெளிவாக ஆடியது. பந்துவீச்சில் 8 வீரர்களை பயன்படுத்தினார் அந்த அணியின் கேப்டன். அந்த திட்டம் ஓரளவுக்கு வேலை செய்தது. பேட்டிங்கில் ரஹீம், சௌம்யா சர்க்கார், அறிமுக வீரர் நயீம் சிறப்பாக ஆடினர்.