12 ஆவது பேஸ்ட்மேனை களத்தில் இறக்கிய தென்னாப்பிரிக்க அணி!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஆவது பேஸ்ட்மேனை களம் இறக்கியுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் இரட்டை சதம், அஜிங்கிய ரஹானேவின் சதம், ஜடேஜாவின் அரைசதம் கைகொடுக்க 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மிக சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷமி, ஜடேஜா, நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 335 ரன்களை  முன்னிலையாக, பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியையே மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது.

தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் முகமது ஷமி, உமேஷின் வேகத்தில் நிலைகுலைந்தது. தேநீர் இடைவேளைக்கு முன் தென் ஆப்பிரிக்க அணி 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியை விட 309 ரன்கள் பின் தங்கி இருந்தது. அப்போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் தென்னாபிரிக்க வீரர் டீன் எல்கர் தலையில் அடி வாங்கியதில் நிலைகுலைந்து போனார். கீழே சரிந்த அவரை உடனடியாக சூழ்ந்த இந்திய வீரர்கள் அவரை பரிசோதித்தனர்.

தென்னாபிரிக்க அணி மருத்துவர்களின் உதவியுடன் அவர் வெளியேறினார். தற்போது 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடும் தென்னாப்பிரிக்க அணி, எல்கருக்கு பதிலாக இந்த போட்டியில் விளையாடாத டீ ப்ரயினை களமிறக்கியுள்ளது. ஐசிசியின் புதிய விதிப்படி 12  ஆவது வீரராக களமிறக்கப்படும் 3 ஆவது வீரர் டீ ப்ரெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆஷஸ் தொடரில் ஸ்மித்துக்கு பதிலாக லம்பச்சனே, வெஸ்ட் இண்டீஸ் இந்தியா தொடரில் டேரன் ப்ராவோக்கு பதில் ப்ளாக்வுட் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.