யாழ்.விமான நிலைய பெயர்ப் பலகை தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்ததில் கடும் கோபத்தில் விமல்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டமையானது அரச மொழிக் கொள்கையை மீறும் செயலாக அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே பெயர் பலகைகளில் முதலில் இருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் முதலில் தமிழ் மொழியும் இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் இருப்பதாக பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மொழிக் கொள்கைகள் இல்லாது போயுள்ளன என்றார்.

யாழ். விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் கடும் பேசுபொருளாக மாற்றப்பட்டதுடன் தென்னிலங்கை ஊடகங்களும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்திப் பேசின.

எவ்வாறாயினும் இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி அரச மொழியாகும். அத்துடன் இரண்டிற்கும் சமமானாக மதிக்கப்பட வேண்டும். வடக்கு பகுதிகளில் நிர்வாக மொழி தமிழ் என்பதும் சிறப்பம்சமாகும்.