நகுலேஸ்வரர் நல்லூர் போன்ற ஆலயங்கள் விரையில் புனரமைப்புச் செய்யப்படும் – ரணில் உறுதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக செட்டிபுலம் சங்கானை பிரமந்தை வீதி புனரமைப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு நேரடியாக பன்னாலை கீரிமலை வீதி புனரமைப்பு வேலைகளை பார்வையிடுவதற்காக கீரிமலை நகுலேஸ்வர ஆலய முன்றலுக்கு விஜயம் மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுருவை சந்தித்து கலந்துரையாடியதோடு நகுலேஸ்வர ஆலயத்தை புனரமைப்புச் செய்வது குறித்தும் கலந்துரையாடினார்.

நல்லூர் கோயில் போன்று இந்த ஆலயமும் மிக முக்கியமானது என குறிப்பிட்ட அவர் விரையில் புனரமைப்புச் செய்யப்படும் என உறுதி அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஏழாலை கட்டுவன் வீதி புனரமைப்பு பணிகளை பணிகளை பார்வையிட்டதோடு, அங்கு அமைக்கப்பட்டுவரும் 53 வீடுகளையும் நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

இதேவேளை இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பிரதேசத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்தினை பிரதமர் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.