காற்பந்தில் சாதனை படைத்த ரொனால்டோ…!

போர்ச்சுக்கலின் பிரபல காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது காற்பந்து வாழ்வில் 700 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய காற்பந்து உலகில் தலைசிறந்த வீரர்களாக விளங்கி வருபவர்கள் ரொனால்டோ, மெஸ்சி. இவர்களுக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இதில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, ஜுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணிக்காக 51 போட்டிகளில் 32 கோல்கள் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக்கில் 127 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, மான்செஸ்டர் அணிக்காக 232 போட்டிகளில் 118 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும், ரியல் மாட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் 450 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன், தேசிய அணியில் (போர்ச்சுக்கல்) விளையாடி 95 கோல்கள் அடித்துள்ளார். இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்தார்.

அது அவரது காற்பந்து வாழ்வில் 700வது கோல் ஆகும். இதன்மூலம் உலகளவில் 700 கோல்கள் அடித்த 7வது வீரர் என்ற என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து அவர் கூறுகையில், ‘சாதனைகள் வருவது வழக்கமானது. நான் அதை எதிர்பார்த்து இருப்பதில்லை. அது என்னை நோக்கி வரும். அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் இல்லாமல் இந்த சாதனையை எட்ட இயலாது.

அவர்களுக்கு நன்றி கூறியாக வேண்டும். என்னுடைய காற்பந்து வாழ்க்கையில் இது சிறப்பானது தான். என்றாலும், உக்ரைனுக்கு எதிராக 1-2 என தோல்வியடைந்தது கசப்பான இனிப்பு.

நாங்கள் உக்ரைனுக்கு எதிராக சிறப்பாக விளையாடினோம். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ, அனைத்தையும் செய்தோம். எங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்தது’ என தெரிவித்துள்ளார்