இலங்கை தமிழர்கள் மீது எனக்கும் அனுதாபம் உண்டு அதற்காக விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது: மலேசிய பங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர்

தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும் வெவ்வேறானாது என மலேசியாவின் புக்கிட் அமான் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான் கூறியுள்ளார்.

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீது எனக்கும் அனுதாபம் உள்ளது. ஆனால் தீவிரவாத இயக்கத்தினர் மீது அனுதாபம் காட்ட முடியாது. இது இரண்டுக்கு வித்தியாசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதேபோலத்தான் பாலஸ்தீனத்திற்கும். அவர்கள் மீது அனுதாபம் காட்ட முடியும், ஆனால் அதற்காக அந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கதுடன் இணையவா முடியும் என ஆயும் கான் வினவினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என குறிப்பிட்டு நேற்று மேலும் ஐவர் கைது செய்யப்பட்டது குறித்து பேசும் போது ஆயுக் கான் இதனைத் தெரிவித்தார். அவர்கள் ஐவரும் செயலிழந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கியது, ஆதரவு அளித்தது, நிதி திரட்டியது ஆகிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த ஐவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

கைது செய்யப்பட்டவர்களுல் ஒருவர் 52 வயது இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் அடங்குவார். இவர் சமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அடுத்ததாக 2ம் மற்றும் 3ம் நபரக்ள் மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் உள்நாட்டுப் போரின்போது இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுக்கூறும் நிகழ்வு ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் ஏற்பாடு செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.

மற்ற இருவர் பினாங்கு புக்கிட் பெர்தாஜாமில் கைது செய்யப்பட்டனர். 26 மற்றும் 29 வயதுமிக்க அவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப்புலி இயக்கத்தின் கொடிகள், புத்தகம், போஸ்டர்ஸ் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் படங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.