தமிழ் நடிகையை திருமணம் செய்யவுள்ள இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே!

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகையை மணக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழ் திரையுலகில் உதயம் NH4 இப்படத்தின் மூலம் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனவர் அஷ்ரிதா ஷெட்டி. ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், இந்திரஜித் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு இளைஞர் பட்டாளம் கிடைத்தது. மேலும் தெலுங்கு திரையுலகில் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்ததால் தற்போது தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நான்காவது இடத்திற்கு சரியாக இருப்பார் என களமிறக்கப்பட்ட மனிஷ் பாண்டே அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ந்து சொதப்பியதால் வாய்ப்புகளை நழுவ விட்டார். இதனை அடுத்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் ஆட இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவதால், மனிஷ் பாண்டே கர்நாடக அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் ஆடி வருகிறார்.

இந்நிலையில் மனிஷ் பாண்டே மற்றும் அஷ்ரிதா ஷெட்டி இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதற்கு இவர்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.

வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடக்க இருப்பதாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போது வரை இதற்கு இவர்கள் இருவரும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.