அதிர்ச்சி முடிவை எடுத்த விராட் கோலி!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்கள் அடிக்க இந்திய அணி 7 விக்கெட்டுளுக்கு 502 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, டீன் எல்கர் 160 ரன்கள், டி காக் 111 ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா அணி  431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால் இந்த இன்னிங்சில் 7 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளிக்க அவரை தொடர்ந்து வந்த புஜாரா 81 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சில் 176 ரன்களை அடித்த ரோஹித், இந்த இன்னிங்சிலும் சதமடித்து அசத்தியுள்ளார். 149 பந்துகளில் 10 பவுண்டரிகள் 7 சிக்சருடன் அவர் 127 ரன்கள் அடித்துள்ளார்.

புஜாரா அவுட் ஆன உடன், திடீரென நான்காவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை விராட் கோலி களமிறக்கினார்.  அதற்கு கைமேல் பலனாக ஜடேஜா 3 சிக்சர்களை அருமையாக விளாசி அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஹானேவும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி 16 பந்தில் 27 ரன்களும், கோலியும் தன் பங்கிற்கு 3 பவுண்டரி ஒரு சிக்சர் 31 ரன்கள் எடுக்க இந்திய அணி 4  விக்கெட்டுகளை இழந்து 323 ரன்களுக்கு எடுத்து இருந்தபொழுது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணில் இதுவரை அதிகபட்சமாக 387 ரன்கள் தான் வெற்றிகரமாக விரட்டபட்டுள்ளது என்பதால், இந்தியா தென்னாபிரிக்கா அணியை சுருட்டுவதற்கு இந்த ரன்கள்  போதுமானதாக இந்திய அணி கருதி உள்ளது. ஆனால் ஆடுகளம் தற்போது வரை பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணிக்கு இது சாதகமா? பாதகமா? என்பது நாளை மாலை தான் தெரியவரும்.