இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பர்! தேர்வுகுழு கவனத்தை பெற்ற புதிய வீரர்!

உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனிக்கு பதிலாக இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் புதிய விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். ஆனால் ஆட்டங்களில் சொதப்பி வருகிறார். அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மட்டுமே தேர்வாளர்கள் பார்வையில் பட்டிருந்த நிலையில் தற்போது புதியதாக ஒரு வீரர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சஹா காயம் அடைந்த பிறகு, தினேஷ் கார்த்திக் சொதப்பியதால் அடுத்ததாக வாய்ப்பு பெற்று சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட், தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டிலும் வாய்ப்பினை பெற்றாலும் தொடர்ச்சியாக தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பாண்டின் மீது திணிக்கப்பட்ட அதிகப்படியான எதிர்பார்ப்பு உருவாகியது, ஆனால் அவரால் அதனை பூர்த்தி செய்ய முடியாமல் ஏமாற்றம் அளித்து வருகிறது. அவருக்கு பதிலாக வேறு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பரிசோதித்து பார்க்கலாம் என்றும், அவருக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் எனவும் இருவேறு கருத்துகளை அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்று முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாகவும் துவக்க வீரராகவும் களமிறங்கிய ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைப்போலவே தொடக்க வீரர்கள் ரேஸில் இருக்கும் மயங்க் அகர்வால், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரும் சொதப்ப, ப்ரியன்க் பஞ்சால் மட்டும் 60 ரன்களை குவித்தார்.

அவர்களை தொடர்ந்து வந்த கருண் நாயர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொதப்ப, ஆனால் அதே சமயத்தில் இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரீகர் பரத் 57 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் அந்த 71 ரன்களில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடிக்க தீவிர முயற்சியுடன் விளையாடி வரும் ஸ்ரீகர் பரத் தற்போது இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி உள்ளதால் அவர் மீது அனைவருக்கும் பார்வை திரும்பியுள்ளது. இதனால் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது என்று கருதப்படுகிறது.