இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்

இந்தியா-தென் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான முதல் டி-20 சர்வதேச போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பொய்து வருவதால் போட்டி நடப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று செப்டம்பர் 15ம் திகதி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

தர்மசாலாவில் பலத்த மழை பெய்த வருவதால் போட்டி ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வானிலை முன்னறிவிப்பின்படி, பகலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

மாலை ஏழு மணிக்கு போட்டி தொடங்கும், ஆனால் மழை ஏற்பட்டால், தர்மசாலா மைதானத்தில் நல்ல வடிகால் அமைப்பு உள்ளதால், மாலை ஐந்து மணிக்கு மழை நின்றால் கூட முழு போட்டி நடக்கும் அளவிற்கு மைதானம் தயாராகும். குறைந்தபட்சம் 5 ஓவர் போட்டியாவது அதிகாரப்பூர்வமாக நடைபெறும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரில் 3-0 என்ற கைப்பற்றிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக எப்படி விளையாடும் என்பதை எதிர்நோக்கி இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

2020 டி-20 உலக கோப்பை பட்டத்தை அடைவதற்காக முழு வீச்சில் செயல்பட்டு வரும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.