குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்..!!!

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போன இந்த காலக்கட்டத்தில் வாழ்கின்ற தாய்மார்களின் துயரம் மிகவும் பெரியது. குழந்தை எதற்காக அழுகிறது? என்கிற கேள்வியில் ஆரம்பிக்கிற அன்றைய தினம், எதைச் சாப்பிடக் கொடுக்கலாம். எவ்வளவு கொடுக்கலாம் என்று அன்று முழுவதுமே நீள்கிறது அவர்களின் கவலை.

அம்மாக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதே குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்? என்ன உணவு கொடுக்கக்கூடாது? எது ஆரோக்கியமான உணவு என்பது தான்.

உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க பழகுங்கள். குழந்தைகளுக்கு சில உணவுகளைக் கொடுக்கக்கூடாது என்ற கட்டுக்கதைகள் பல உள்ளன. ஆனால் அவற்றுள் சில உணவுகள் குழந்தைகளுக்கு உண்மையில் ஆரோக்கியத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகத்தான் உள்ளது.

குழந்தைகளுக்கு உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுப்பது அத்தனை எளிய விஷயம் கிடையாது. ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவை அறிமுகப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு என்ன உணவு தேவை என்பதை அறிந்து அதை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அம்மாவின் கடமை. மேலும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்குச் சுவையை விரும்பும் பண்புகள் உள்ளன. ஆனால் அவற்றை உணவில் காட்டமாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன உணவு கொடுக்கிறீர்களோ அவற்றை சாப்பிடுவார்கள்.

எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை கொடுக்கும் பழக்கத்தைத் தொடருங்கள்.

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவை பல வகை சத்துக்கள் நிறைந்ததாக கொடுங்கள். அதாவது ஊட்டச்சத்து நிறைந்து உள்ளது என்பதால் ஒரே உணவை அடிக்கடி கொடுக்காதீர்கள்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை மாற்றி மாற்றிக் கொடுங்கள். நீங்கள் மளிகை சாமான்களை வாங்கும் போது அதில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள்.

எது சிறந்தது? எதற்காக அந்த சத்து நிறைந்த பொருட்களை வாங்குகிறோம்? என்று சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளுக்கு படிப்படியாக எல்லா சுவைகளையும் சொல்லிக் கொடுங்கள்.

குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டிய உணவுகள் !

தானியங்கள் 3 முதல் 4 முறைகள்

காய்கறிகள் 2 முதல் 3 முறைகள்

பழங்கள் 3 முதல் 4 முறைகள்

பால் பொருட்கள் 4 முதல் 5 முறைகள்

புரதச்சத்து உணவுகள் 2 முறைகள்

ஒரு முறை கொடுக்கும் உணவு என்பது அவர்களின் நடவடிக்கையை பொறுத்து மாறுபடும். நாம் சாப்பிடும் உணவில் 4ல் ஒரு பங்கை அவர்களுக்கு கொடுத்தால் போதும்.