விடுதலைப் புலிகளின் சிறையில் சிங்கள போராளிகள்..?

சர்வதேச சமூகத்தின் மீது சவேந்திர சில்வாவுக்கு பயம் இல்லாமல் போனதாலேயே தமிழர் காணிகளை விடுவிக்க முடியாது என கூறுகின்றார், என ஈழ மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தினம் உலகம் முழுவதும் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சண் மாஸ்டர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சர்வதேச காணாமல் போனோர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. காணாமல் ஆக்கப்படுவதை கண்டித்து உலகமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்கள் மத்தியில் மனித நேயத்துடன் நடந்துகொள்ளவே இத்தினம் ஐ.நாவால் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஈழ தமிழர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் காணாமல் போனோரை மீட்டெடுக்க வேண்டி அனைத்து மக்களும் உறுதிபூண வேண்டும்.

இலங்கை அரசினால் போரை வெற்றி கொள்ள பயன்படுத்தப்பட்ட ஆயுதம் காணாமல் ஆக்கப்படுதலே. முப்படையினரையும் பயன்படுத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களை மீட்டெடுக்க அவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் ஆயிரம் நாட்களை நெருங்குகின்றது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும்.

2013இல் மஹிந்த ராஜபக்ஷவால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோர் விசராணை பரணகம ஆணைக்குழுவில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய உள்ளக விசாரணையினால் எதுவும் நடக்க போவதில்லை, இலங்கை அரசால் ஒரு போதும் தம் உறவுகளுக்கு நீதி கிடைக்காது என அறிந்தும் அவர்கள் ஆணைக்குழுக்களில் முறைப்பாடுகளை மேற்கொள்வது, தம் உறவுகளை தேடுவதில் தாம் எப்போதும் உறுதியாக இருக்கிறார்கள், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தம் உறவுகளை தேடுவதில் பின்வாங்கப்போவதில்லை எப்பொழுதும் அவர்களுக்காக போராடுவோம், தமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்பதை சர்வதேசம், மற்றும் இலங்கை அரசிற்கு தெரியப்படுத்தவே ஆகும்.

அவர்கள் எதிர்பார்த்த நீதி பன்னாட்டு நீதி விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதி மன்ற விசாரணைகள் மூலம் கிடைக்கும் என்பது அவர்களின் மாறாத ஒரே நம்பிக்கை.

ஆனால் இவ்விடயத்தில் ஐ.நா காலத்தை நீடிக்கின்றது. இலங்கை அரசும் காலத்தை இழுத்தடிக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.

புதிய அரசில் இது மாறும் என்ற நம்பிக்கை அதிகரித்திருந்த நிலையில் அது பொய்யாகி நல்லாட்சி என அழைக்கப்படும் இந்த அரசமைப்பில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழர்களின் வாக்குளை பெற்று ஆட்சியமைத்த இந்த அரசு இன்று தமிழர்களையே குறிவைத்து செயற்ப்படுகின்றது. அவர்களை நல்லாட்சி என்ற ஒற்றை சொல்லைவைத்து ஏமாற்றியுள்ளனர்.

இந்த நாட்டில் இன்னும் நல்லாட்சி என்ற சொல்லை தமிழர் மட்டும் தமிழ் ஊடகங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பதே சிங்கள அரசு கண்ட பாரிய வெற்றி.

மைத்திரி, மஹிந்த, ரணில் தமது அரசியல் சுயலாபத்திற்காக தமிழர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் தமிழர் நலனிற்கு உழைக்கும் மனித உரிமைகள் அமைப்பும் தமிழ் உறவுகளும் தோற்றுப்போயுள்ளனர்.

தமிழ் தலைமைகளின் பொறுப்பில்லாத செயற்பாடே இவ்வாறான செயற்பாடுகளாக்கு காரணமாய் அமைகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா முன்னிலையில், ரணில் காணாமல் போனவர்கள் என்று யாருமே இந்த நாட்டில் இல்லை என கூறுமளவிற்கு தமிழ் தலைமைகளை செயற்பாடு இருக்கின்றது.

த.தே.கூ. முள்ளிவாய்க்கால், மற்றும் மாவீரர்களை வைத்து அரசியல் செய்கின்றனர். இவற்றை சொல்லி வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி கண்டதும் சிங்கள அரசுக்கு சார்பாக செயற்படுகின்றது.

தமக்கு சார்பான அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்திய அவர்கள் தம் இனம் சார்ந்த உரிமைகளுக்காக ஒரு எழுத்துமூலமான உறுதிப்பாட்டை பெறவில்லை. அவர்கள் தமது சுயலாபத்திற்காக தமிழர் வாக்குகளை பயன்படுத்துகின்றனர்.

மைத்திரியை நெல்சன் மண்டேலா என சம்பந்தன் வர்ணித்தார். நெல்சன் மண்டேலா ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி ஏன் ஒரு ஊடக சந்திப்பை கூட சம்பந்தன் செய்யவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருநாள் சபையில் வெளிநடப்பு செய்ய வேண்டும். சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு நிற உடை அணிய வேண்டும், சத்தியாகிரக போராட்டம் மேற்கொள்ள வேண்டும்.

இதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது என தமிழ் உறவுகளால் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பினர் எதற்கும் ஆதரவளிக்கவில்லை.

சவேந்திர சில்வா நியமனம் மற்றும் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை இன்னும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடும் தாமும் காணாமல் ஆக்கப்படலாம் என்ற அச்சமே அது. சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பவே சிங்களவர்கள் காணாமல் போனார்கள் என கூறுகின்றனர்.

போரில் இறந்த இராணுவத்தின் உடலங்களை பொறுப்பேற்றால் சிங்கள மக்கள் இராணுவத்தில் இணைய அச்சம் கொள்வார்கள் என மறுத்தனர்.

இதனால் விடுதலைப் புலிகள் அவற்றை தகனம் செய்தனர். இலங்கை அரசு அவர்கள் புலிகளின் சிறையில் உள்ளனர் என கூறி அவர்களின் உறவுகளை நம்ப வைத்தனர். இதனையே தற்போது சிங்களவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என சர்வதேசத்திற்கு திசை திருப்பிவிட்டுள்ளனர்.

சவேந்திர சில்வா மீது இரசாயன ஆயுத பயன்பாடு, பாலியல் குற்றம், ஆட்கடத்தல் என பல குற்றச்சாட்டுகளை ஐ.நா முன்வைத்துள்ளது.

ஆனால் இவர் உள்ளிட்ட போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு இலங்கை அரசு பல பதவிகள் வழங்கியுள்ளது. மைத்திரி பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துள்ளார்.

இலங்கை மீது தொடர்ந்து பன்னாட்டு விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.