பர்தாவை கிழித்து இனவெறி தாக்குதல்!

அயர்லாந்தில் பர்தா அணிந்து வந்த முஸ்லீம் சிறுமி மீது, முட்டை வீசி சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டப்ளின் புறநகர்ப் பகுதியான டன்ட்ரமில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவாக முகம் தெரியாத அந்த வீடியோவில் மர்ம நபர்கள் சிலர், 14 வயது சிறுமி மீது இனவெறியுடன் முட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு சிறுமியின் தலையில் இருந்த பர்தாவை கிழித்துவிட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

வீடியோவை காண…

பின்னர் நடுவீதியில் அழுதுகொண்டிருந்த அந்த சிறுமிக்கு அங்கு நின்று கொண்டிருந்த சிலர் ஓடிவந்து உதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் வீடியோ பொலிஸாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சிகரெட் கேட்டு அந்த குழுவினர் கடையில் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகே சிறுமியிடமும் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பட்டப்பகலில் உள்ளூர் நேரப்படி 15:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் கவுன்சிலர் ஜிம் ஓ லியரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஏதேனும் தெரிந்தால் சம்மந்தப்பட்டவர்கள் முன்வந்து தகவல் கொடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலாச்சார மற்றும் பாரம்பரிய அமைச்சர் ஜோசெபா மடிகனும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பொறுப்பானவர்கள் நீதியை “விரைவாக” பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஐரிஷ் பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் கேத்தரின் மார்ட்டின், இனவெறி தாக்குதலுக்கு எதிராக அனைவரும் உறுதியுடன் நிற்க வேண்டும் என கூறியுள்ளார்.