முதலமைச்சருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மோதல்!!

2011 ஆம் ஆண்டு, என்றைக்கு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததோ, அன்றிலிருந்து பால் விலை உயர்வு என்பது மூன்றாவது முறையாக அரங்கேறி இருக்கின்றது. எப்பொழுதும் “மக்களுக்கு பால் வார்ப்பார்கள்” என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்தப் பாலினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதைக்கேட்டால் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்வார் என்றால், கொள்முதல் விலையை உயர்த்துகின்ற போது, அதனை வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கும் சிரமப்படுத்தக்கூடாத வகையில் அதனையும் நாங்கள் உயர்த்துகிறோம் என்று பெருமையாகவும், வேறு வழியில்லை என்றும் சொல்கின்றார். எனவே கொள்முதலாளர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கு, சண்டையை மூட்டுவதற்கான முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதுமட்டுமல்ல பால்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு ராஜேந்திர பாலாஜி அவர்கள், இந்த பால் வளத் துறையைப் பொறுத்தவரையில் அதிக லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று பெருமையோடு சொல்கின்றார். ஆனால், முதலமைச்சர் என்ன சொல்கின்றார் என்றால், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது அதனால்தான் பால் விலையை உயர்த்துகின்றோம் என்று சொல்கின்றார். எனவே அவர்களிடத்திலேயே முரண்பாடு இருக்கின்றது. எது உண்மை எது பொய் என்பதை மக்களிடத்தில் அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.