11 கோடிகளை குவித்த செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் தேசிய அரசியலை வென்று மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் உண்ணத பணியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழங்கி, மக்களின் ஆணையினைப் பெற்றுக் கொடுத்து, நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைத்தார்.

ஆனால், இன்று அத்தலைவர்கள் செய்து கொண்டு இருக்கும் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் இனத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் தியாக உணர்வுகளை குழி தோண்டிப் புதைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தை நாட்டின் அதி உயர் நிறுவனமான நாடாளுமன்றத்தில் பேசுவார்கள் என்று எண்ணியிருந்தவர்கள், ஜனநாயகத்தை விடுத்து பணநாயக அரசியல் செய்யும் இழி நிலையிலிருக்கிறார்கள் என்பது தமிழ் மக்களின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.

தேசியம், சுயநிர்ணயம், தமிழ் மக்களின் சுயாட்சி என்று பேசுவார்கள் என்று எண்ணியிருக்கையில், கோடிகள், பதவிகள், சொகுசு கார்கள் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழ் மக்களின் துயரத்தில் நடக்கும் விளையாட்டுக்களாக அமைந்திருக்கின்றன.

அண்மையில், வவுனியா பாவக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கரும்புச் செய்கைக்காக காணியினைப் பெறுவதற்காக வட மாகாண சபை இயங்கு நிலையிலிருந்த போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அக்காணியை கதைக்க அனுமதியைப் பெறுவதற்காக ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சென்றிருந்தார்.

அவரைச் சந்தித்து இந்த அனுமதியைப் பெறுவதற்காக அந்த தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபா பணத்தினை முற்பணமாக செல்வம் அடைக்கலநாதன் பெற்றுள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பின்னர், இதற்கான அனுமதி கோரப்பட்ட போது வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இது ஆராயப்பட வேண்டியது என்று கூறி அனுமதியை மறுத்திருந்தது. பிரச்சினைக்குரிய விவகாரம் என்பதோடு மக்களின் நிலங்கள் தொடர்பிலும் இது தொடர்பு உடையது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.

இச் சூழலில் அந்த நிறுவனத்தாரின் அழுத்தத்தின் காரணமாக ரணிலுடன் கலந்துரையாடி அமைச்சரவை அனுமதிப் பத்திரம் போடுவதற்கு கலந்துரையாடி அனுமதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் அமைச்சரவை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட பின்னர் தனியார் நிறுவனம் மூலமாக செல்வம் அடைக்கலநாதனுக்கு மேலும் பத்துக் கோடி ரூபாவை வழங்கப்பட்டுள்ளது.

கருப்புச் செய்கைக்காக செல்வம் அடைக்கலநாதனிடம் ஆரம்பத்தில் ஒரு கோடி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலமாக பெறப்பட்ட பத்துக் கோடி என்று மொத்தம் 11 கோடி ரூபா பணம் கைமாறப்பட்ட விடயம் தற்போது கசிந்துள்ளது. அந்நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் மூலமாக இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்மொழிகளின் பூரண திறன் இல்லாத செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசி தீர்வினை நோக்கி நகர்ந்து செல்லாமல் தன் பணநாயக அரசியல் செய்வதை மக்கள் இன்று படுமோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் ஏராளமான பிரச்சினைகளால் தமிழ் மக்கள் தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். பார்க்கும் இடங்கள் எங்கும் விகாரைகள் அமைக்கப்பட்டு தமிழர்களின் அடையாளங்கள் சிதைக்கப்படுகின்றன.

மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரத்தில் தன் வாயை மூடிக்கொண்டிருந்த அடைக்கலநாதன் நாடாளுமன்றம் சென்றதன் நோக்கம் கோடிகளைச் சம்பாதித்துக் கொட்டவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் தேசியத்தின் பெயரால் தங்கள் வயிற்றையும் அதிகாரக் கதிரையும் தக்க வைத்துக்கொண்டு ஊழல் செய்து மக்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில் இவர்கள் தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளாக என்ன செய்து முடித்திருக்கிறார்கள். அதேபோன்று கல்முனை விவகாரத்தில் முன்னின்று செயற்படுத்தி மக்களின் போராட்டத்திற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியாத கோடீஸ்வரன் போன்ற உறுப்பினர்கள் அம்மக்களுக்கான பிரதிநிதிகளாக இருந்தும் என்ன லாபம்?

அதேபோன்று ஜனா போன்றவர்களம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையற்றவர்களாக செயற்படுகின்றார்கள்.

உண்மையில் கட்சியின் தலைமை சீராக இருந்தால் மட்டுமே அவர்களின் கீழ் உள்ளவர்கள் சீராக இருக்க முடியும். ஆனால், தலைவர்கள் பணத்தின் மீது தங்கள் பாதங்களை வைக்கும் பொழுது கட்சி உறுப்பினர்களும் அதையே தான் பின்பற்றுவார்கள்.

தேசியத்தின் பெயராலும், மக்களின் பிணத்தினை வைத்தும் வாக்குகளை வாங்கிக் கொண்டு நாடாளுமன்றக் கதிரைகளில் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளின் முகத்திரைகளை சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மூலம் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல, கூட்டமைப்பின் பணநாயக அதிகார ஆசை பிடித்த அரசியல்வாதிகளின் திருட்டுத்தனங்கள் நீண்ட நாட்களுக்கு மறைந்திருக்கப்போவதில்லை. அவை மக்களின் கண்களுக்கு தென்பட்டே தீரும்.