தயவு செய்து அதை வெட்டாதீங்க… கதறி அழுத சிறுமிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்..

இந்தியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தான் ஆசையாக வளர்த்த மரத்தை வெட்ட வேண்டாம் என்று கூறி கதறி அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது அந்த சிறுமிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் காக்சிங் நகரைச் சேர்ந்தவர் இளங்பம் பிரேம்குமார். இவருக்கு இளங்பம் வேலன்டினா தேவி என்ற 10 வயதில் மகள் உள்ளார்.

அந்த சிறுமி தனது வீட்டருகே இரண்டு குல்முகர் மரக்கன்றுகளை ஆசையாக நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சாலை அகலப்படுத்தும் பணிக்காக அந்த மரங்களை அதிகாரிகள் வெட்ட உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் அந்த மரங்கள் வெட்டப்படுவதைக் கண்ட, சிறுமி கதறி அழுத படி மரங்களை வெட்ட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, அது வைரலானதால், அந்த வீடியோவை பார்த்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உடனடியாக சிறுமி வேலன்டினாவை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவருக்கு 20 மரங்களைக் கொடுத்து அதை நடுவதற்கான இடத்தையும் அளியுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறுமி வேலன்டினாவை மாநிலத்தின் பசுமை மணிப்பூர் இயக்க தூதராகவும் அவர் நியமித்துள்ளார். பசுமையை ஊக்குவிக்கும் மணிப்பூர் அரசின் அனைத்து விளம்பரங்கள், பிரச்சாரங்களிலும் இனி வேலண்டினாவின் புகைப்படம்தான் இடம்பெறும் எனவும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.