ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலக அளவில் அதீத வருமானம் ஈட்டும் வீராங்கனை பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீராங்கனை மட்டுமே இடம்பிடித்து இருக்கின்றார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை பி.வி.சிந்து அதிக வருவாய் ஈட்டும் 15 வீராங்கனைகள் பட்டியலில், 13வது இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பி.வி.சிந்துவின் ஆண்டு வருவாய் ரூ.39 கோடியாக மதிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்திய அணியின் ஊதியம் மற்றும் போட்டிகளில் வென்ற பரிசுத்தொகை 4 கோடி என்றும், விளம்பரங்கள் மூலமாக ரூ.35 கோடியும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனையாக சர்வதேச அளவில் அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் தற்போது நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்து இருக்கின்றார். இவரது ஆண்டு வருவாய் 207 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது இடத்தில் ஜப்பானின் நவோமி ஒஸாகாவும், 3வது இடத்தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரும் இருக்கின்றனர். முதல் 15 இடத்தை பிடித்த வீராங்கனைகளில் 11 பேர் டென்னிஸ் விளையாட்டில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






