இளைஞருக்கு வாள்வெட்டு: குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்!

கனடாவில் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற இரு இளைஞர்கள் தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோவின் Barrie பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இந்தக் கொலை முயற்சி நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதில் 22 வயதான விஸ்வநாத் மங்கல் என்ற இளைஞரையும் 33 வயதான ஆண்ட்ரூ டெவோய் ஃபோர்டு ஸ்மித் என்பவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் 28 வயதான இளைஞர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கூரான ஆயுதத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறும் பொலிசார், கொலை முயற்சி, ஆபத்தான முறையில் ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தேடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இருவர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் என அறிவித்துள்ளனர்.