வேலை கேட்டு சென்ற 17 வயது சிறுமியை சீரழித்த பெரும்புள்ளி!

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சென்ற கார் பெரும் விபத்தில் சிக்கிய நிலையில் இது தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரிடம் வேலை கேட்டு சென்ற போது அவரும், உடன் இருந்த சிலரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுமி கடந்த 2017-ல் பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார். அதற்கு முன்னதாக அவர் எம்.எல்.ஏ ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்தான் கடந்த ஞாயிறு அன்று, பாதிக்கபட்ட பெண் பயணித்த கார், அதிவேகமாக வந்த லொறியால் மோதலுக்குள்ளானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பயணித்த அவரின் இரு பெண் உறவினர் பலியாயினர்.

மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் கடுமையான காயங்களுடன் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தும் எம்.எல்.ஏ குல்தீப் செங்காரின் வேலை தான் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பெண்ணின் மாமா கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரியே அவர்களின் பயன விவரங்களை எம்.எல்.ஏ-க்கு கூறினார் என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சிறையில் இருக்கும் குல்தீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

குல்தீப் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளார்.

இதனிடையில் அந்த பெண்ணின் காவலர் சுரேஷ் அளித்தப் பேட்டியில், குறிப்பிட்ட நாளில் அப்பெண்ணின் உறவினர் காரில் இடமில்லை.,இன்று நீங்கள் வர வேண்டாம் என கூறியதால் தான் நான் அவருடன் செல்லவில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருக்க வேண்டிய காவலர் சுரேஷ் விபத்து நடந்த அன்று உடன் இல்லாதது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.